#

#

Wednesday, November 16, 2016

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராத புதிய டிக்கெட் கவுன்டர் : டிக்கெட் வாங்குவதற்கு தண்டவாளத்தை கடப்பதால் விபத்தில் சிக்கும் பயணிகள்

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான தண்டுரை, காமராஜர்புரம், சோழன் நகர், சார்லஸ் நகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், கக்கன்ஜி நகர், வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், கருணாகரச்சேரி, சோராஞ்சேரி, அன்னம்பேடு, அமுதூர்மேடு, சித்துக்காடு, வயலாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் சென்னை நகர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர்கள் சென்று வருகின்றனர். 

ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்டர் உள்ளது. பயணிகள் இங்குள்ள தண்டவாளத்தை தாண்டிதான் டிக்கெட் கவுன்டருக்கு செல்ல வேண்டும். மேலும், சைடிங் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும்  இங்குதான் டிக்கெட் வாங்க வேண்டும். முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் வாங்கி கொண்டு மீண்டும் தண்டவாளத்தை கடந்து 2, 3வது பிளாட்பாரத்திற்கும், சைடிங் ரயில் நிலையத்திற்கும் செல்ல வேண்டியது உள்ளதால் பயணிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையம் வெளியே டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

 இதனை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.7 லட்சம் செலவில் ரயில் நிலையத்தின் வெளியே டிக்கெட் கவுன்டர் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் இதுவரை அந்த டிக்கெட் கவுன்டரை திறக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், பயணிகள் தினசரி டிக்கெட் வாங்க கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கவும், எளிதாக பயணிகள் டிக்கெட் வாங்கவும், புதிய டிக்கெட் கவுன்டரை திறக்க தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Site Search