#

#

Monday, October 24, 2016

ஆவடி நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணி







ஆவடி : ஆவடி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இது குறித்து தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்துக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டங்களுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.271 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக, ஒரு வீட்டு இணைப்புக்கு தலா ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு, வங்கிகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகளுக்காக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த திமுக ஆட்சியில் போர்க்கால அடிப்படையில் இத்திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டது.
இதன்பிறகு, ஆவடி நகரின் முக்கிய பிரதான சாலைகள், குறுக்கு சாலைகள் என அனைத்திலும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.

பாதாள சாக்கடை திட்டத்துக்காக பருத்திப்பட்டு, முத்தாபுதுப்பேட்டை ஆகிய இடங்களில் 2 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 17 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் கட்டப்பட்டன. குடிநீர் திட்டத்துக்கு ஆவடி,  திருமுல்லைவாயல், சோழம்பேடு, பட்டாபிராம், தண்டுரை, சேக்காடு, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை,  ஆகிய இடங்களில் 15 ராட்சத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி (20112016) பொறுப்புக்கு வந்ததும், இத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களில் குழாய் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்றது. பின்னர் படிப்படியாக இப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் வீடுகளில் இருந்து கழிவுநீர் தொட்டிகளில் வெளியேறும் கழிவுநீரை, இரவோடு இரவாக குழாய் மூலம் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய் இணைப்பில் சேர்த்துவிடுகின்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சில ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் உடந்தையாக உள்ளனர். இதன் காரணமாக  பல தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக  ஓடுகிறது. இதன் விளைவாக அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவி வருகின்றன.

0 comments:

Post a Comment

Site Search