#

#

Sunday, October 16, 2016

ஆவடி அருகே மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை



ஆவடி,
மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மாயம்
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை தண்ணீர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 19). நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரசாந்த், அதன் பிறகு வீடு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் பிரசாந்தை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது பிரசாந்த் போனை எடுக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தொடர்பு கொண்ட போது போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
நேற்று காலை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் அருகில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அது மாயமான பிரசாந்த் என்பது தெரிய வந்தது.
இதுபற்றி அவருடைய தந்தை சுப்பிரமணிக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த சுப்பிரமணி, பிணமாக கிடப்பது தனது மகன் பிரசாந்த் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
மேலும் இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மின்சார ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை தண்டவாளம் அருகே வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Site Search