#

#

Wednesday, November 16, 2016

திருநின்றவூரில் மணல் கடத்தல் - டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி ; கூட்டாளிகளுக்கு வலை -





ஆவடி, -ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திருநின்றவூர், கொசவன்பாளையம், பொன்னியம்மன்மேடு, எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (எ) யேசு (37) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளுவதற்கு சென்றுள்ளார்.பின்னர் அவரும் கூட்டாளிகளும் சேர்ந்து கூவம் ஆற்றில் மணல் அள்ளி டிராக்டரில் நிரப்பிக் கொண்டனர். 
பின்னர் மணலுடன் டிராக்டரை எடுத்துக்கொண்டு கூவம் ஆற்றிலிருந்து வெளியே வந்தனர்.அப்போது அவரது டிராக்டர் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் உரிமையாளர் தமிழ்வாணன் டிராக்டரின் இன்ஜினுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த தமிழ்வாணனின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்




ஆவடி: ஆவடி பகுதியில் விளிஞ்சியம்பாக்கம் ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் சென்றடையும். இந்த கால்வாய் கருமாரி அம்மன் கோயில் பிரதான சாலை, காமராஜர் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு வழியாக சுமார் 3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் 25 அடி அகலத்தில் இருந்த இந்த உபரிநீர் கால்வாய், முறையான பராமரிப்பில்லாததால் தற்போது பெரும்பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விளிஞ்சியம்பாக்கம் முதல் காமராஜர் நகர் பிரதான சாலை வரை 25அடி அகலம் கொண்டதாகவும், அதன் பிறகு ஆக்கிரமிப்பு காரணமாக 6 அடியாகவும் சுருங்கிவிட்டது. 

இதனால், மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேற முடியாமல் சரஸ்வதி தெரு, பாண்டியன் தெரு, ஜெயபிரகாஷ் நாராயணன் தெரு, வள்ளலார் தெரு, நேரு காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆண்டுதோறும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

மேலும், பல ஆண்டாக தூர்வாரப்படாததால் குப்பைகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பையை சுத்தம் செய்து, தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், வரும் மழைக்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இனிமேலாவது அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படாமல் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராத புதிய டிக்கெட் கவுன்டர் : டிக்கெட் வாங்குவதற்கு தண்டவாளத்தை கடப்பதால் விபத்தில் சிக்கும் பயணிகள்

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான தண்டுரை, காமராஜர்புரம், சோழன் நகர், சார்லஸ் நகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், கக்கன்ஜி நகர், வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், கருணாகரச்சேரி, சோராஞ்சேரி, அன்னம்பேடு, அமுதூர்மேடு, சித்துக்காடு, வயலாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் சென்னை நகர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர்கள் சென்று வருகின்றனர். 

ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்டர் உள்ளது. பயணிகள் இங்குள்ள தண்டவாளத்தை தாண்டிதான் டிக்கெட் கவுன்டருக்கு செல்ல வேண்டும். மேலும், சைடிங் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும்  இங்குதான் டிக்கெட் வாங்க வேண்டும். முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் வாங்கி கொண்டு மீண்டும் தண்டவாளத்தை கடந்து 2, 3வது பிளாட்பாரத்திற்கும், சைடிங் ரயில் நிலையத்திற்கும் செல்ல வேண்டியது உள்ளதால் பயணிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையம் வெளியே டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

 இதனை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.7 லட்சம் செலவில் ரயில் நிலையத்தின் வெளியே டிக்கெட் கவுன்டர் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் இதுவரை அந்த டிக்கெட் கவுன்டரை திறக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், பயணிகள் தினசரி டிக்கெட் வாங்க கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கவும், எளிதாக பயணிகள் டிக்கெட் வாங்கவும், புதிய டிக்கெட் கவுன்டரை திறக்க தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து விபத்து

ஸ்ரீபெரும்புதூர்,





ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பஸ்களுக்கும் நடுவில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
அரசு பஸ்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதற்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அரசு பஸ்கள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல, 2 பஸ்களுக்கும் நடுவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ஊராட்சி பகுதியில் சென்ற போது ஆவடி செல்லும் அரசு பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென ‘பிரேக்’ பிடித்து லாரியை நிறுத்தினார்.
மோதல்
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆவடி சென்ற அரசு பஸ் டிரைவர், லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை ‘சடன் பிரேக்’ போட்டு நிறுத்தினார். அந்த பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் மோட்டார் சைக்கிளை ‘பிரேக்’ பிடித்து நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ், முன்னால் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
வாலிபர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், இரண்டு அரசு பஸ்களுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டார். பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பலியான அந்த வாலிபர் யார்?, எந்த ஊர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் காயம்
இந்த விபத்தில் ஆவடி சென்ற பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை








ஆவடி,

ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

திருமண ஏற்பாடு

சென்னை உள்ளகரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் சரவணன் (வயது 31). பட்டப்படிப்பு முடித்து விட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சரவணனுக்கு அவருடைய பெற்றோர் திருவேற்காட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என சரவணன் கூறியுள்ளார். இது பற்றி பெண் வீட்டாரிடம் சரவணனின் பெற்றோர் தெரிவித்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் பெண் வீட்டார் இதை ஏற்கவில்லை.

தூக்கில் தொங்கினர்

இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் தன்னுடைய சித்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய சித்தி வீட்டில் இல்லை. அவருடைய மகள் சரண்யா (23) மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் சரவணனும், சரண்யாவும் வீட்டில் ஒரே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று மாலை சரண்யாவின் தம்பி வீட்டுக்கு வந்த போது தன் அக்காளும், அண்ணன் சரவணனும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தங்கை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆவடியில் பணாத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்







திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் உள்ள இந்தியன் வங்கியில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் இன்று காலை குவிந்தனர். வங்கி கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையில் ரொக்கமாக 4 ஆயிரம் பெற்றுச் சென்றனர். 

இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் காத்திருந்து தங்களது ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றி சென்றுள்ளனர்.

ஆவடி அருகே வியாபாரி வீட்டில் 10 சவரன் கொள்ளை




ஆவடி, -ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகர், காவேரி தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (35). அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி திருப்பதி (28) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் பேச்சிமுத்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு வீட்டில் தனியாக இருப்பதற்கு பயந்து, திருப்பதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பேச்சிமுத்துவின் வீட்டில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர் பாலுசாமி பாதுகாப்புக்கு தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பாலுசாமி வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் நேற்றிரவு பேச்சிமுத்துவின் வீட்டுக்கு பாலுசாமி திரும்பினார்.அப்போது பேச்சிமுத்து வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து பேச்சிமுத்துவின் மனைவி திருப்பதிக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் திருப்பதி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். - See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=99794#sthash.NXM2X9u1.dpuf

பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீர் அதிர்வு..! 4 மணி நேரம் பரபரப்பு..!!




சென்னையை அடுத்த, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்து வளாகத்தில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்த பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, விரிசல் கட்டிடம் சீரமைக்காமல் வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த ஆவடி போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் பள்ளி கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகே பள்ளி திறக்கப்படும். அதுவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனவும் நிர்வாகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர் பெற்றோர்கள். இதனால் பள்ளி வளாகத்தில் சுமார் 4 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை.. ஆவடியில் பதற்றம்

திருவள்ளுர்: ஆவடி நகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் ஆவடி நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சிங்காரம். இவரின் தந்தை வீரராகவன்(65) இன்று மாலை ஆவடி டேங்க் பேக்டரி அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த வீரராகவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என்ற விவரமோ, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமோ இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.




ஆனால் அதுகுறித்த தகவல் இதுவரை காவல்துறைக்கு அளிக்கப்படவில்லையாம். அந்த பகுதியைச்சேர்ந்த ராணுவத்தில் உள்ள உயரதிகாரிகள்தான் தங்கள் பணத்தை கொட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வேறு இடத்திலிருந்து அப்பகுதிக்குள் வந்து பணத்தை கொட்டுவது சாதாரணமான விஷயமில்லை என தெரிகிறது. மைதானத்தில் கொட்டப்பட்டிந்த பணத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

Sunday, October 30, 2016

ஆவடி பொன்னு பஜாரில் தீ விபத்து






ஆவடி, -ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பொன்னு சூப்பர் மார்க்கெட்டில் 4 தளங்கள் உள்ளன. இதில் மளிகை, துணிமணிகள், ஸ்டேஷனரி, பொம்மை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 25/10/2016 அன்று வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். 3 வாட்ச்மேன்கள் இரவு காவல் பணியில் இருந்தனர்.
இந்த சூப்பர் மார்க்கெட்டின் முதல் தளத்தில் துணிமணி பிரிவில் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த வாட்ச்மேன்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.அம்பத்தூர், ஆவடி, டேங்க் பேக்டரி ஆகிய 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள துணிமணிகள் எரிந்து சேதமாகிவிட்டன என்று கூறப்படுகிறது.
ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Monday, October 24, 2016

ஆவடி, அயப்பாக்கம் இடையே குண்டும் குழியுமாக மாறிய கேம்ப் சாலை; தினமும் மக்கள் தவிப்பு





சென்னை : ஆவடியில் இருந்து அயப்பாக்கம் வழியாக தனக்கில்லா கேம்ப் சாலை செல்கிறது. இச் சாலையில் உள்ள அயப்பாக்கத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றது. மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் தனக்கில்லா கேம்ப் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக உடைந்துக்கிடந்தது. இதனால் இச்சாலை வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கடும் சிரமப்பட்டனர். இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதி சாலை அமைக்கப்பட்டது. அது தரமாக இல்லாததால் சில மாதங்களிலேயே உடைந்து ஜல்லி கற்கள் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. 

இதுபற்றி அயப்பாக்கம் மக்கள் கூறுகையில், ‘’தனக்கிலா கேம்ப் ரோடு உடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டது. சிலரின் முயற்சியால் தற்போது ஒருசில பஸ்கள் சென்று வருகின்றன. வணிக வளாகம், கடைகள், பல ஆயிரம் வீடுகள் வந்தபிறகும் அயப்பாக்கம் ஊராட்சியாகவே உள்ளது. எனவே, அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். அல்லது ஆவடி பெரு நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்றனர்.

ஆவடி நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணி







ஆவடி : ஆவடி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இது குறித்து தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்துக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டங்களுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.271 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக, ஒரு வீட்டு இணைப்புக்கு தலா ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு, வங்கிகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகளுக்காக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த திமுக ஆட்சியில் போர்க்கால அடிப்படையில் இத்திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டது.
இதன்பிறகு, ஆவடி நகரின் முக்கிய பிரதான சாலைகள், குறுக்கு சாலைகள் என அனைத்திலும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.

பாதாள சாக்கடை திட்டத்துக்காக பருத்திப்பட்டு, முத்தாபுதுப்பேட்டை ஆகிய இடங்களில் 2 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 17 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் கட்டப்பட்டன. குடிநீர் திட்டத்துக்கு ஆவடி,  திருமுல்லைவாயல், சோழம்பேடு, பட்டாபிராம், தண்டுரை, சேக்காடு, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை,  ஆகிய இடங்களில் 15 ராட்சத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி (20112016) பொறுப்புக்கு வந்ததும், இத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களில் குழாய் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்றது. பின்னர் படிப்படியாக இப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் வீடுகளில் இருந்து கழிவுநீர் தொட்டிகளில் வெளியேறும் கழிவுநீரை, இரவோடு இரவாக குழாய் மூலம் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய் இணைப்பில் சேர்த்துவிடுகின்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சில ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் உடந்தையாக உள்ளனர். இதன் காரணமாக  பல தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக  ஓடுகிறது. இதன் விளைவாக அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவி வருகின்றன.

ஆவடி அருகே, ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல் செய்தவர் கைது 4 மாதத்துக்கு பிறகு போலீசிடம் சிக்கினார்






ஆவடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவான ஊழியரை 4 மாதங்களுக்கு பின்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
சென்னை நந்தனத்தில் ‘ரைட்டர்ஸ் சேப் கார்ட்’ என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் பணத்தை பெற்று ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் நிரப்புவார்கள். இதில் பொறுப்பாளராக ஆவடி ஜே.பி. எஸ்டேட் சரஸ்வதி நகரை சேர்ந்த டில்லிகுமார் (வயது 34) என்பவர் 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இவர், அன்றாடம் காலை நிறுவனத்துக்கு சென்ற பின்னர் இவரிடம் அந்த நிறுவனம் பணத்தை கொடுத்து சென்னை கொரட்டூர் முதல் திருவள்ளூர் வரை அந்த நிறுவன அதிகாரிகள் சொல்கிற ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணத்தை நிரப்பி வந்தார். இவருடன் ஒரு பாதுகாவலரும் வேன் டிரைவரும் செல்வார்கள்.
ரூ.42 லட்சம் கையாடல்
அப்படி நிரப்பப்பட்ட பணம் எவ்வளவு எடுக்கப்பட்டு உள்ளது, மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை அதிகாரிகள் வந்து தணிக்கை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் உள்ள 3 ஏ.டி.எம். எந்திரங்களில் அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது சுமார் ரூ.42 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பிய டில்லிகுமாரிடம் அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்தனர். அப்போது திடீரென அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நிறுவன அதிகாரிகளுக்கு டில்லிகுமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.
4 மாதத்துக்கு பின்பு கைது
இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் முரளி (35) ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் டில்லிகுமாரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆவடி பஸ் நிலையம் அருகே மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக டில்லிகுமார் வந்தார். அப்போது அவரை ரகசியமாக கண்காணித்த தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரை 4 மாதத்துக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் டில்லி குமாரை, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார். அதுபற்றி போலீசார் கூறியதாவது:–
மேலும் ரூ.27 லட்சம்
பல வருடங்களாக இந்த நிறுவனத்தில் டில்லிகுமார் வேலை செய்து வந்ததால் அவர் மட்டும் தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவார். அப்போது மற்றவர்கள் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள். அதேபோல் அவருக்கு மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் போடுவதும் எடுப்பதற்குமான ரகசிய எண் தெரியும்.
எனவே பணத்தை நிரப்பி விட்டு சென்ற பின்னர் அவரே திரும்ப வந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை கையாடல் செய்துள்ளார். ஆவடி பகுதியில் மட்டும் 3 ஏ.டி.எம். எந்திரங்களில் இதுபோல் ரூ.42 லட்சம் கையாடல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுதவிர, திருவள்ளூரில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து சுமார் ரூ.27 லட்சம் வரை கையாடல் செய்து இருப்பதாகவும் டில்லிகுமார் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றியும் விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் டில்லிகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

வீட்டை உடைத்து 11 பவுன் கொள்ளை - பட்டாபிராமில் மர்ம நபர்கள் துணிகரம்




புழல், -பட்டாபிராம் பகுதியில் வீடு உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், காசி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (55). இவரது மனைவி சசிகலா (52). இவர்கள் கடந்த 18ம் தேதி கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.  அங்கிருந்து நேற்று மதியம் வீடு திரும்பினர். வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை மர்ம ஆசாமிகள் உடைத்து, அதில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுபற்றிய புகாரின் அடிப்படையில், பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலி




திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலியானது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பஜனைகோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசனின் ஐந்து வயது மகள் தர்ஷினி ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நண்பருக்கு அடி உதை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்





புழல், -குடிக்க பணம் தராததால் நண்பரை கட்டையால் அடித்து உதைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி, திருமலை பிரியா நகரில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு ஆவடியை சேர்ந்த ரவி (25), பூம்பொழில் நகரை சேர்ந்த கலைச்செல்வன் (25) ஆகியோர் தங்கி  வேலை செய்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  போதை குறைவாக இருந்ததால் மேலும் மது குடிக்க கலைச்செல்வனிடம் ரவி பணம்  கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த கலைச்செல்வன் திடீரென அங்கு கிடந்த கட்டையை எடுத்து ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் பயந்துபோன கலைச்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.அப்பகுதியினர் ரவியை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை கொள்ளை



புழல், -ஆவடி அடுத்த பட்டாபிராம், சாஸ்திரி நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தனது தாயாரைப் பார்ப்பதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.இதனால் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை பணி முடிந்து அசோக்குமார் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்றபோது, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு மர்ம ஆசாமி அசோக்குமாரை தள்ளிவிட்டு வெளியே வேகமாக ஓடினான். இதனால் அதிர்ந்த அசோக்குமார், திறந்து கிடந்த வீட்டு பீரோவை பார்த்தார்.

அதில் வைத்திருந்த அனைத்து துணிமணிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்களை அசோக்குமார் சரிபார்த்தபோது, பீரோ லாக்கரில் இருந்த 6 சவரன் தங்க நகைகளை காணவில்லை. அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமி, விடியும்வரை அங்கேயே இருந்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது அசோக்குமாருக்குத் தெரியவந்தது.இப்புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி மர்ம ஆசாமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆவடி அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது




ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் அண்ணா சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 52). இவரது மகன் ஜம்புலிங்கம் (25) லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். ஜம்புலிங்கம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்துக்கு கொடுக்காமல் வீண் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தந்தைக்கும்–மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி மகன் ஜம்புலிங்கத்திடம் வீண் செலவு செய்வதை கண்டித்துள்ளார்.
இதையடுத்து ஜம்புலிங்கம், தந்தை கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மகன் என்றும் பாராமல் கத்தியை எடுத்து ஜம்புலிங்கத்தின் முதுகில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜம்புலிங்கம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை நேற்று காலை கைது செய்தனர்.

Sunday, October 16, 2016

ஆவடி அருகே மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை



ஆவடி,
மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மாயம்
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை தண்ணீர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 19). நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரசாந்த், அதன் பிறகு வீடு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் பிரசாந்தை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது பிரசாந்த் போனை எடுக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தொடர்பு கொண்ட போது போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
நேற்று காலை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் அருகில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அது மாயமான பிரசாந்த் என்பது தெரிய வந்தது.
இதுபற்றி அவருடைய தந்தை சுப்பிரமணிக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த சுப்பிரமணி, பிணமாக கிடப்பது தனது மகன் பிரசாந்த் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
மேலும் இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மின்சார ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை தண்டவாளம் அருகே வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி நகராட்சியில் விரைவில் குடிநீர் இணைப்புகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு





ஆவடியைச் சேர்ந்த என்.பாபு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். குறித்த காலத்தில் நிறைவு பெறாததால் 2009-ல் போராட்டங்கள் நடை பெற்றன. அதன்பிறகும், இத்திட்டம் முழுமையாக முடியவில்லை. எனவே, தாமதமாகும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவடி நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குடிநீர் திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஒரு வாரத்தில் 100 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
‘அனைத்து இணைப்புகளும் எப்போது வழங்கப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‘ஒரு மாதத்துக்கு 1,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்’ என்றார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே குடிநீர் இணைப்பு கேட்ட 18 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நீங்கள் சொல்லும் கணக்குப்படி, இவற்றுக்கு இணைப்பு வழங்கவே 18 மாதங்கள் ஆகும். 2 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய திட்டத்துக்கு ஏற்கெனவே 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனவே, அனைத்து குடிநீர் இணைப்புகளையும் ஆவடி நகராட்சி நிர்வாகம் விரைந்து வழங்கி, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Thursday, October 6, 2016

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது. வீடியோ இணைப்பு




                                                                    நன்றி   புதிய தலைமுறை

Tuesday, October 4, 2016

ஆவடியில் அனைத்து காய்கறிகள் விதைகள் விற்பனை --இலவச ஹோம் டெலிவரியுடன்


                           ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். 
                      
                                       ஆனால் இன்றைக்கு ஆர்கானிக் பொருட்கள் விற்கிறோம் என்கிற பெயரில் நிறைய நிறுவனங்கள் கெமிக்கல் கலந்த பொருட்களை விற்கின்றனர்.மக்களும் அதை நம்பி வாங்கிசெல்கின்றனர் .ஆதலால் ஆர்கானிக் முறையில் நாம் வீட்டிலேயே  அனைத்து விதமான காய்கறி செடிகளும் வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளை உண்டால் உடல் ஆரோக்கியம் அடையும் .
                                 
                                          வீட்டிலேயே அனைத்து செடிகளை வளர்க்க அனைத்து விதமான காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்  கிடைக்கிறது. இலவச ஹோம் டெலிவெரியுடன்.....


                      தொடர்புக்கு: 9840387520

விவசாயம் செய்யும் ஐடி பெண்

ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். விலையும் குறையும்...’’ என்று அடித்து கூறுகிறார் ரேகா. இவர் சென்னையில் ஆர்கானிக் ஃபார்ம் மார்க்கெட் என்ற கூட்டுறவு சந்தையை அறிமுகம் செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

‘‘எங்க குடும்பம் விவசாய குடும்பம். அப்பா விவசாயி. நான் பொறியியல் பட்டப்படிப்பு படிச்சதே, அப்பாவின் விவசாய சம்பாத்தியத்தில்தான்.  என் கணவரின் குடும்பமும் விவசாய குடும்பம்தான். ரெட்ஹில்ஸ் - ஆவடிக்கு அருகே பாண்டேஷ்வரம் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. நானும் என் கணவரும் பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்த்து வந்தோம்.

என்னத்தான் விவசாய குடும்பம் என்றாலும், நாங்களும் ரசாயண உரம் கொண்டுதான் விவசாயம் செய்து வந்தோம். அதனால் எங்களுக்கு உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போனது. அப்போதுதான் நாம் சாப்பிடும் உணவுகளே இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்று உணர்ந்தோம். இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 

ஐ.டி துறையில் நாங்கள் இருவரும் வேலை பார்த்து வந்தாலும் விவசாயத்தை நாங்கள் விடவில்லை...’’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் ரேகா, ரசாயண உரம் கொண்டு விவசாயம் செய்தால், எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு நிலத்தில் விளைச்சல் பார்க்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்தே தாங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியதாகவும் சொல்கிறார்.‘‘இதற்கு மட்டுமே ஒரு வருடம் ஆனது. பல ஆண்டுகளாக ரசாயணம் கொண்டு விளைவித்த நிலம் என்பதால் மண் வளம் அழிந்திருந்தது. அதை மாற்றி அமைக்க ஓராண்டு ஆனது.

மண் வளமாக மைக்ரோப்ஸ் அவசியம். அதனால் முதலில் தக்கப்பூண்டை கொண்டு மண்ணை உழுது அதை மக்க வைத்தோம். அதன் பிறகு கீரை வகைகளை விளைவித்தோம். கீரைகளுக்கு மண்ணை வளமாக்கும் தன்மை உண்டு. இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை ஒரே பயிரை விளைவிக்க கூடாது. மாற்று பயிரை விளைவிக்கும் போதும், ஊடு பயிரை செய்யும் போதும்தான் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும். அதாவது, நிலத்தில் நெல் பயிரை விளைவித்தால், மறுபக்கம் அகத்திக் கீரையை பயிர் செய்யலாம். 

அகத்திக் கீரைக்கு பூச்சிகளை தன் வசம் இழுக்கும் தன்மை உண்டு. இதன் மூலம் நெல் பயிரை பாதுகாக்க முடியும். அதே சமயம் அகத்திக் கீரையை 25 நாட்களில் அறுவடை செய்து மறுபடியும் விளைச்சல் செய்யலாம். இதன் வழியாக ஒரு வருமானமும் கிடைக்கும்.அகத்திக் கீரைக்கு அடுத்து உளுந்து போடும் போது அது 60 நாட்களில் விளைச்சல் கொடுக்கும். இப்படி ஒரே நேரத்தில் மூன்று விதமான பயிர்களின் விளைச்சலை பார்க்க முடியும். மண் வளமும் மாறாது. நிலத்தில் தண்ணீர் வளமும் அதிகரிக்கும்...’’ என்று சொன்ன ரேகா, இதன் பிறகு தன்னுடைய அனைத்து நிலங்களையும் இயற்கை விவசாயமாக மாற்றி அமைத்துள்ளார். 

‘‘என் மாமனார் முதலில் ஒரு சிறிய நிலத்தை பயிர் செய்ய கொடுத்தார். அந்த நிலம் விவசாயம் செய்யாமல் சும்மாதான் இருந்தது. நானும் என் கணவரும் அதை மாற்றினோம். விளைச்சலும் நன்றாக கிடைத்தது. எங்களின் சொந்த பயன் பாட்டுக்குப் போக மீதமும் இருந்தது. அதை அருகில் இருக்கும் ஆர்கானிக் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தோம்.ஆனால், அதற்கான பணம் வந்து சேர ஏழேட்டு மாதங்களானது. அதேபோல் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அதை சரியாக பராமரிக்காமல் சில நாட்களுக்கு பின் ‘வண்டு வருகிறது...’ எனதிருப்பிக் கொடுப்பார்கள்.

இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டது. பொருளும் வீணானது. போக்குவரத்து செலவும் அதிகரித்தது.நாங்கள் பரவாயில்லை. வேறொரு வேலையை பார்த்தபடிதான் விவசாயம் செய்கிறோம். தவிர ஆர்கானிக் கடைகளின் அருகில் வசிக்கிறோம். ஆனால், சிறிய விவசாயிகளின் நிலை? இவர்கள் இப்படி பணம் கொடுக்க இழுத்தடித்தால், அவர்களால் எப்படி அடுத்த விளைச்சலில் கவனம் செலுத்த முடியும்? அதே போல் பொருட்களை திருப்பிக் கொடுக்கும்போது ஏற்படும் நஷ்டத்தை எப்படி தாங்கிக் கொள்வார்கள்?இந்த கேள்விகள் என்னை வட்டமிட்டபடியே இருந்தன. 

இந்த சமயத்தில்தான் அனந்து என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை கொட்டி வாக்கத்தில் ஆர்கானிக் கடை ஒன்றை
நிர்வகித்து வருகிறார். பல விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கி அவர் அதனை விற்பனை செய்கிறார். 
இதனால் விவசாயிகள் இடைத்தரகர்கள் தொல்லையின்றி நல்ல வருமானம் பார்த்தார்கள். இதை சரியாக செய்தால் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் ஆர்கானிக் உணவுகள் கிடைக்கும்படி செய்யலாம் என்று தோன்றியது. இதனை அடுத்துதான் ஆர்கானிக் ஃபார்மிங் கூட்டுறவு மார்க்கெட் அமலுக்குவந்தது...’’ என்று சொல்லும் ரேகா, இதை எட்டு பேருடன் இணைந்து தொடங்கியுள்ளார். 

‘‘விவசாயத்தில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். என் அப்பா முதலில் திட்டினார். ‘நாங்களே விவசாயத்தில் இருந்து விலகிட்டோம். நீங்க இப்ப என்ன செய்ய போறீங்க...’ என்று கேட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். விளைச்சலையும்காண்பித்தேன்.

அனந்து மூலம் இயற்கை விவசாய அமைப்பின் உறுப்பினராக சேர்ந்தேன். அங்குதான் கூட்டுறவு அமைப்புக்கான விதை ஊன்றப்பட்டது. நாங்கள் எட்டு பேர் இணைந்தோம். திருச்சி, சேலம் என்று இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை சென்று சந்தித்தோம். அவர்களின் நிலத்தில் எந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
இதன் பிறகே அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முடிவு செய்தோம்.

சிலர் இயற்கை விவசாயம் செய்வதாக சான்றிதழ் எல்லாம் காண்பிப்பார்கள். ஒரு சிறு விவசாயியால் அந்த சான்றிதழை அவ்வளவு எளிதாக வாங்க முடியாது. அதே போல் ஒரு சிலர் ரசாயன தொழிற்சாலைக்கு நடுவே உள்ள நிலத்தில் விவசாயம் செய்வார்கள். இப்படித்தான் பலரும் தாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருவதாக சொல்லி வருகிறார்கள். எனவேதான் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிடுகிறோம். ஆய்வு செய்கிறோம். எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அவர்களை எங்கள்
கூட்டுறவு மார்க்கெட்டில் இணைத்துக்கொள்வோம். 

இப்போது எங்க கூட்டுறவில் 16 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளுக்கும் தேவை இருப்பதால், ஒரு விவசாயின் மொத்த விளைச்சலையும் நாங்க வாங்கிக் கொள்கிறோம். இதனால் அந்த விவசாயிக்கும் கணிசமான லாபம் கிடைக்கிறது.இன்னொரு முக்கியமான விஷயம். விலையை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. அந்த விவசாயியேதான் தன் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கிறார். எங்கள் நிலத்தில் விளையும் ஜீரகசம்பா அரிசியை கிலோ ரூ.75க்கு விற்கிறோம். 

ஆனால், சில விவசாயிகள் தங்கள் செலவுக் கணக்கை பார்த்து ரூ.100 என்று சொல்வார்கள். அவர்கள் குறிப்பிடும் விலைக்கே வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் வந்தால் போதும். விவசாயிகள் அல்லது வாடிக்கையாளரின் வயிற்றில் அடித்து சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை...’’ என்ற ரேகா, தங்கள் கடை களில் பிராண்ட் பொருட்கள் விற்கப்படுவதில்லை என்கிறார். 

‘‘ஆர்கானிக் பொருட்களை ஒரு சிலர் பிராண்ட் வைத்து விற்கிறார்கள். அவை உண்மையில் ஆர்கானிக்தானா என்று நமக்கு தெரியாது. நாங்கள் நேரடியாக விவசாயிகளிடம் சென்று வாங்குவதால், அதன் தரத்தை கணக்கி முடியும். வாடிக்கையாளர்களும் நம்பி பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எனவே பிராண்ட் என்று முத்திரை கொடுக்க விரும்பவில்லை. எங்கள் கடைகளில் எல்லா பொருட்களும் டப்பாக்களில்தான் இருக்கும். எண்ணெய் மற்றும் மாவு பொருட்களை மட்டும்தான் பாக்கெட்டில் அடைத்து விற்கிறோம். 

100 கிராம் முதல் கிலோ கணக்கு வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் எல்லாம் கிலோ 45 ரூபாய். அதே போல் கேரட், உருளை, பீட்ரூட் எல்லாம் கிலோ 55 ரூபாய் என விற்பனை செய்கிறோம். என்ன இருந்தாலும் ஆர்கானிக் பொருட்கள் மற்ற பொருட்களை விட கொஞ்சம் அதிக விலைதான். காரணம் இயற்கை விவசாயத்தில் எல்லா விவசாயிகளும் ஈடுபடவில்லை. இயற்கை விவசாயிகளால் நம்முடைய தேதவைக்குஏற்ப விளைச்சலை கொடுக்க முடியவில்லை. இயற்கை விவசாயம் என்ற பெயரில் பலர் கலப் படம் செய்து வருகிறார்கள். கலப்படம் செய்யும் விவசாயிகளால், ஒரே நேரத்தில் ஐந்து விதமான பொருட்களை கொடுக்க முடியும். 

ஆனால், சிறிய அளவில் இயற்கை விவசாயம் செய்பவர்களால் அந்த அளவுக்கு விளைச்சலை தர முடியாது. ஒரே காய்கறிகளைதான் அவர்களால் கொடுக்க முடிகிறது. விலை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்...’’ என்று சொன்னவர் தன்னுடைய பணியை காலை ஐந்த மணிக்கே தொடங்கி விடுகிறாராம்.  ‘‘மொத்தம் 16 கடைகள். 10 விவசாயிகள். அனைவரும் தங்கள் விளைச்சல் காய்கறிகளை வண்டியில் ஏற்றி கோயம்பேட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

எனவே காலை ஐந்து மணிக்கு நாங்கள் கோயம்பேடு சென்றுவிடுவோம். வண்டி மார்க்கெட்டுக்குள் நுழையும் போதே, அதில் உள்ள லோடுகளை இறக்கி விடுவோம். காரணம் வண்டி மார்க்கெட் உள்ளே சென்றுவிட்டால், அங்கிருந்து மூட்டைகளை எடுத்து வருவது சிரமம். எல்லா விவசாயிகளும் ஒரே ஊரில் வசிக்கவில்லை. எனவே ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஒவ்வொரு நேரத்துக்கு வண்டி வரும். அதனால் எல்லா வண்டிகளும் வந்த பிறகே காய்கறி மற்றும் பழ லோடுகளை பிரித்து எங்கள் கடைகளுக்கு கொடுப்போம். இதன் பிறகுதான் வியாபாரம். 

கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் எங்கள் வியாபாரம் நடக்கிறது. எங்கள் கடைகளுக்கு என்று சில கோட்பாடுகள் உண்டு. முன்பே சொன்னபடி பிராண்ட் பொருட்களை விற்க மாட்டோம். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், 16 பேரின் ஒப்புதலும் தேவை. பாரம்பரிய உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம். அரிசி கூட பாரம்பரிய அரிசிகள்தான். நாங்கள் ஒவ்வொருவரும் மாதம்தோறும் இரண்டு விவசாயிகளை நேரில் சென்று பார்க்கிறோம். அவர்களை இயற்கை விவசாயத்துக்கு மாறச் சொல்கிறோம். கூடவே, இயற்கை விவசாயம் செய்பவர்களையும் சந்தித்து அவர்களது பொருள் எங்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதா என்று கணித்து எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். 

எங்களிடம் வாங்க வருபவர்கள் அவரவர் கையில் பையுடன் வரவேண்டும். அப்படிஇல்லாதவர்களுக்கு நாங்கள் துணி பை தருகிறோம். அதற்கு ரூ.20 கட்டணத்தை தனியாக வசூலிக்கிறோம். அடுத்த முறை வரும் போது அந்த பையை திருப்பி கொடுத்தால் ரூ.20-ஐ திருப்பித் தருகிறோம். மற்றபடி ப்ளாஸ்டிக் பைகளைநாங்கள் பயன்படுத்துவதில்லை.ஒன்று தெரியுமா கார் ஷெட் அல்லது வராண்டாவில்தான் முதலில் விற்க ஆரம்பித்தோம். அதன் பிறகுதான் கடைகளாக மாறியது...’’ என்று சொல்லும் ரேகா, இன்னும் பத்து வருடங்களில் எல்லாமே இயற்கை விவசாயமாக மாறிவிடும் என்கிறார்.

‘‘இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட் களின் விலை மற்ற மார்க்கெட் பொருட்களை விட அதிகம்தான். ஆனால், இந்த விலை வித்தியாசம் கண்டிப்பாக குறையும். எல்லாரும் இயற்கை உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். அப்போதுதான் நம் சமூகம் ஆரோக்கியமாக மாறும்...’’ என்கிறார் அழுத்தம்திருத்தமாக. 

Friday, September 30, 2016

மின்சாரம் வந்த வரலாறு

      

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் என்பதில் இருந்து தோன்றியது. 

‘ஆம்பர்’ எனும் பொருள் துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறு சிறு துண்டு காகிதங்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600ல் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். உண்மையில் மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் வோல்டா என்பவர் தான். மின்சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் செல்லை முதன் முதலில் அவர் அறிமுகம் செய்தார். எலெக்ட்ரிக் செல் உருவான பிறகு மின்சக்தியில் இருந்து வெப்பசக்தி, ஒளிசக்தி மற்றும் காந்த விளைவுகளை பெறமுடிந்தது.

வோல்டா கண்டுபிடித்த செல்லில் ஒரு துத்தநாக தகடும், ஒரு தாமிரத் தகடும் நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கி இருக்குமாறு வைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளை இணைத்தால் மின்சக்தி கிடைத்தது. பிறகு இந்த செல் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டது.

மின்சாரத்தை பொருத்தவரை 1831-ல் மிகவும் புரட்சிகரமான செயலை செய்தவர் மிக்கேல் பாரடே என்பவர். ஒரு காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகிறது என்பதை அவர் கண்டு வெளியிட்டார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. 

1867-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முதன் முதலாக வெற்றிகரமாக டைனமோ என்ற ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்சார மோட்டார்களும், டிரான்ஸ் பார்மர்களும் உருவாக்கப்பட்டன. 

19-ம் நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் சில பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. 1858-ல் அமெரிக்கவால் அருவியை பயன்படுத்தி டர்பைன்களை சுழலச் செய்து அதன் மூலம் மின்சக்தியை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் நீர் மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. 

20-ம் நூற்றாண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்சமயம் சூரிய சக்தி மூலம் முழுமையான மின்சக்தியை பெறுவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். 

Wednesday, September 7, 2016

பல நாட்களாக தேங்கி நிற்கும் குப்பைகள் ஆவடி ஹவுசிங்போர்டு




                                                            பல நாட்களாக தேங்கி நிற்கும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் வந்தாலும் இதை அப்புறப்படுத்தவில்லை!!!!!

 இடம்: ஆவடி ஹவுசிங் போர்டு,  46, வது தெரு!!!!!!
                                              இதை ஒரு வேலை அப்புறப்படுத்தினாலும் .மீண்டும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது .அப்பகுதி மக்களின் கடமையாகும்...

                                                                                             -------------நன்றி----------------
                                                                                                           கடாஃபி

Tuesday, September 6, 2016

மனித நேயத்திற்கு எல்லை ஒரு பொருட்டல்ல என நிரூபித்த பஹ்ரைன் பிரதமர்





புவனேஸ்வர்: ஒடிஷாவில் மருத்துவமனையில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஏழை மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மாஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23ம் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மாஜ்கி தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மனம் வருந்தி உள்ளார். பின் தானா மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ள
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தானா மாஜ்கியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்

Site Search